செய்திகள்

ஒக்கி புயலில் சிக்கி மாயமான 16 நாகை மீனவர்களின் கதி என்ன?

Published On 2017-12-07 05:30 GMT   |   Update On 2017-12-07 05:30 GMT
ஒக்கி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக்கோரி கடலோர காவல் படை, மாவட்ட கலெக்டர் சுரேசுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை மனுக்களை அளித்து உள்ளனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பலர் கேரளாவில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். 20 நாட்களுக்கும் மேல் கேரள கடல் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்வது இவர்களின் வழக்கம்.

இந்த நிலையில் ஒக்கி புயல் காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் பலர் மீட்கப்பட்டு வரும் நிலையில் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேரின் கதி என்ன? என்பது மர்மமாக உள்ளது.

கொள்ளிடம் அருகே உள்ள கூழையார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், கலைமணி, தமிழ்பாலன், ஏழுமலை, வானகிரி கிராமத்தை சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த ரவி, விமல்ராஜ், தினேஷ், விக்னேஷ், ராஜேஷ், ரகு, காளியப்பன், தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாயவன், கலைச்சந்திரன், விஜயநாதன், தரங்கம்பாடியை சேர்ந்த பார்த்திபன் ஆகிய 16 மீனவர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களின் கதி என்ன ஆனது? என்பது பற்றி தெரியவில்லை. இதனால் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மீனவ கிராம மக்கள் கண்ணீரில் மூழ்கி உள்ளனர். கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக்கோரி கடலோர காவல் படை, மாவட்ட கலெக்டர் சுரேசுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை மனுக்களை அளித்து உள்ளனர்.

நாகை மாவட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவ கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் மாயமான மீனவர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினரிடம் சீர்காழி தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், கிராம நிர்வாக அதிகாரி மோகன் மற்றும் அதிகாரிகள் மீனவ கிராமங்களில் விசாரணை நடத்தினர். 



Tags:    

Similar News