செய்திகள்

ஒக்கி புயல் தாக்கம்: கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் ரத்து

Published On 2017-11-30 10:45 GMT   |   Update On 2017-11-30 10:45 GMT
புயல் மழை காரணமாக கன்னியாகுமரியில் இருந்து இன்று புறப்படவேண்டிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

தென்மேற்கு வங்கக் கடலில் தூத்துக்குடி அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறி லட்சத்தீவு நோக்கி நகர்ந்து வருகிறது. ஒக்கி என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் புயல் நகரத் தொடங்கியபோது கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மரங்கள் வேருடன் சாய்ந்தன. தகவல் தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து இன்று புறப்பட வேண்டிய அனைத்து விரைவு ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் மரங்கள் விழுந்து கடப்பதால் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மரங்களை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News