செய்திகள்

சேலம் பொன்னம்மாபேட்டையில் தீயில் கருகிய 7-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2017-11-29 10:39 GMT   |   Update On 2017-11-29 10:39 GMT
சேலம் பொன்னம்மாபேட்டையில் தீயில் கருகிய 7-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் பொன்னம்மாபேட்டை கார்பெண்ட் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது 3-வது மகள் கார்த்திகா (வயது 12). 7-ம் வகுப்பு மாணவியான இவர் நேற்று முன்தினம் இரவு உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தத நிலையில் அலறி அடித்த படி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவரது உடல் முழுவதும் கருகியது. உடனே அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

100 சதவீதம் உடல் கருகியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணியளவில் கார்த்திகா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஸ்டவ் அடுப்பை பற்ற வைக்க மண்ணெண்ணை  ஊற்றிய போது அருகில் இருந்த கொசு வர்த்தியில் மண்ணெண்ணை கொட்டியதால் தீ விபத்து ஏற்பட்டு மாணவி உடல் கருகியதாக மாணவியின் உறவினர்கள் கூறினர்.

மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், மாணவி கார்த்திகா அதே வீட்டில் ஒரு அறையில் தனியாக படுத்ததாகவும், அந்த அறையில் தனியாக படுக்க வேண்டாம் என்று அவரது சகேதாரர்கள் மற்றும் சகோதரிகள் கூறியதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாணவிக்கு தீ வைத்திருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டாரா? அல்லது தீ விபத்தில் சிக்கி உடல் கருகினாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதையொட்டி ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News