செய்திகள்

தாம்பரம் அருகே மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-11-27 15:20 IST   |   Update On 2017-11-27 15:20:00 IST
தாம்பரம் அருகே மழை நீரை வெளியேற்றக்கோரி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம்:

தாம்பரம் அருகே சேலையூரை அடுத்த திருவஞ்சேரி ஊராட்சியில் தாஸ்நகர் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

ஏற்கனவே பெய்த மழைநீர் அங்குள்ள தெருக்கள் மற்றும் வீடுகளை சூழ்ந்து நிற்கின்றன. அவை வெளியேற வடிகால் வசதி இல்லாததால் பல நாட்களாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய்பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன்மீது வருவாய்துறை நடவடிக்கை எடுக்கும் என்றார்.

ஆனால் மழைநீர் அகற்றப்படவில்லை. இதற்கிடையே நேற்று மீண்டும் பலத்த மழை பெய்ததால் அங்கு அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது.

எனவே அவற்றை வெளியேற்ற வலியுறுத்தி தாஸ்நகர் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் சேலையூர் அருகே அகரம் தென் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதை தொடர்ந்து சமரசம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக இங்கு சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News