செய்திகள்

மத்திய அரசின் செயல்பாடுகளில் ஜனாதிபதி தலையிட்டால் மோடி ஏற்றுக்கொள்வாரா?: நாராயணசாமி

Published On 2017-11-17 14:50 IST   |   Update On 2017-11-17 14:50:00 IST
மத்திய அரசின் செயல்பாடுகளில் ஜனாதிபதி தலையிட்டால் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா? என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆலந்தூர்:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் மாநில அரசை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். அப்படி இருக்கும் போது பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் மாநில அரசின் உரிமைகளில் கவர்னர் தலையிடுவது எந்த வகையில் நியாயம். அதற்கான உத்தரவு எங்கிருந்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையில் மத்திய பா.ஜனதா அரசு தலையிடுவது தெளிவாக தெரிகிறது.

மத்திய அரசை பா.ஜனதா ஆட்சி செய்யும் நிலையில் மத்திய அரசு அதிகாரிகளை ஜனாதிபதி அழைத்து ஆலோசனை நடத்த முடியுமா?


மத்திய அரசின் செயல்பாடுகளில் ஜனாதிபதி தலையிட்டால் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா?

ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது பிரதமர்கள் சென்னை வருவதற்கே யோசித்தனர். அப்படி இருக்கும்போது தற்போது தமிழகத்தில் கவர்னர் ஆய்வு நடத்துவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்?

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடு தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News