செய்திகள்

வடலூரில் அன்னதான கூடத்தில் தீ விபத்து: கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது

Published On 2017-11-13 10:15 GMT   |   Update On 2017-11-13 10:15 GMT
வடலூரில் அன்னதான கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
வடலூர்:

வடலூரில் அன்னதான கூடத்தில் விறகு அடுப்பில் இருந்த தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பற்றி எரிந்தது. இதில் அருகில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த மேட்டுக்குப்பத்தில் மதுரையைச் சேர்ந்த நந்திசரவணன் என்பவர் அன்னதானம் வழங்குவதற்காக அன்னதான கூடம் அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வருகிறார். இங்கு வரும் ஏழை-எளிய மக்களுக்கு தினமும் 3 வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை 3 மணிக்கு விறகு அடுப்பில் உணவு தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விறகு அடுப்பில் உள்ள தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பிடித்தது.

அந்த தீ மளமளவென்று அனைத்து இடங்களிலும் பரவியது. அதனை அங்கிருந்த ஊழியர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதனால் ஊழியர்கள் அனைவரும் சமையல் கூடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த அந்த தீ அருகில் இருந்த கியாஸ் சிலிண்டரில் பிடித்ததால் அது வெடித்து சிதறியது.

இது குறித்து தர்மசாலை நிர்வாகத்தினர் சேத்தியாத்தோப்பு மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அன்னதான கூடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமடைந்து எலும்பு கூடாக மாறியது.

அன்னதான கூடத்தில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், மேஜை- நாற்காலி, பாத்திரங்கள் உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News