செய்திகள்

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது: நோயாளிகள் வெளியேற்றம்

Published On 2017-11-03 15:14 IST   |   Update On 2017-11-03 15:15:00 IST
கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பழைய கட்டிடத்துக்குள் மழை தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டன.
தாம்பரம்:

கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பழைய கட்டிடத்துக்குள் மழை தண்ணீர் புகுந்தது.

கீழ் தளத்தில் உள்ள மகப்பேறு பிரிவு வார்டுகளுக்குள் தண்ணீர் சென்றதால் அங்கிருந்த 50 பெண்கள் மற்றும் குழந்தைகள் உடனடியாக முதல் தளத்துக்கு மாற்றப்பட்டனர்.

இதே போல் மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் இடம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. மருத்துவமனைக்குள் புகுந்த தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

‘‘இந்த ஆஸ்பத்திரி பழைய கட்டிடம். தாழ்வான பகுதி என்பதால் மழை நீர் புகுந்து உள்ளது. நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.



புதிய கட்டிடம் கட்ட ஏற்கனவே ரூ.10 கோடி நிதியை அரசு ஒதுக்கி உள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும். மழை வெள்ளப்பாதிப்பை தடுக்கவும், உபகரணங்கள் வாங்கவும் ஆஸ்பத்திரிக்கு உடனடியாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநோயாளிகள் பிரிவு வார்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடக்கிறது.

இதே போல் அருகில் உள்ள காசநோய் தடுப்பு மருத்துவமனைக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

Similar News