செய்திகள்

மயிலாடுதுறை பகுதியில் மழை: அரசு ஆஸ்பத்திரி கட்டிட சிமெண்ட் காரை மீண்டும் விழுந்தது

Published On 2017-10-31 15:57 GMT   |   Update On 2017-10-31 15:57 GMT
மயிலாடுதுறையில் பெய்த தொடர்மழை காரணமாக நேற்று மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ சிகிச்கை பிரிவு கட்டிடத்தின் வரண்டா முகப்பு பகுதியில் திடீரென சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம், பொறையாறில் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலக பணியாளர் ஓய்வறை கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியானார்கள். இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது.

இதனால் பழுதான கட்டிடங்களில் செயல்படும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடு துறையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் பலர் உள் நோயாளியாக தங்கி இருந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரி மகப்பேறு சிகிச்சைப் பிரிவு வராண்டா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது.

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் பெய்த தொடர்மழை காரணமாக நேற்று மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ சிகிச்கை பிரிவு கட்டிடத்தின் வரண்டா முகப்பு பகுதியில் திடீரென சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் நோயாளிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கட்டிடம் குறித்து பொதுமக்கள் கூறும்போது, இக்கட்டிடம் 1989ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு 20 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த கட்டிடம் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் கட்டிட உறுதி தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை வேறு வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர்.
Tags:    

Similar News