செய்திகள்

வாடகை கட்டணத்தை குறைக்க கோரி ஊட்டியில் நாளை மறுநாள் கடையடைப்பு: வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Published On 2017-10-31 17:46 IST   |   Update On 2017-10-31 17:46:00 IST
ஊட்டியில் நகராட்சி கட்டணத்தை குறைக்க கோரி நாளை மறுநாள் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
ஊட்டி:

ஊட்டி நகர வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கவுரவ தலைவராக ஜெயராமன், தலைவராக முஸ்தபா, செயலாளராக ரவிக்குமார், பொருளாளராக ராஜா முகமது,துணை தலைவராக ரெக்ஸ்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் ஊட்டி நகராட்சி கடைகளுக்கு வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. வாடகையை உடனே செலுத்த வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். நகராட்சி கடைகளுக்கு உயர்த்தப்பட்ட வாடகையை மறுமதிப்பீடு செய்து வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை மறுநாள் (2-ந்தேதி) முழு கடையடைப்பு நடத்துவது.

இதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்றாலோ, அதிகாரிகள் அழைத்து பேசவில்லை என்றாலோ வருகிற 7-ந் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்பு நடத்துவது.

போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்களிடம் தெரிவித்து ஆதரவு கேட்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஊட்டி நகர வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் 2 மணி நேரம் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Similar News