செய்திகள்

தீபாவை 3 நாளாக காணவில்லை: வீடு பூட்டி கிடப்பதால் தொண்டர்கள் ஏமாற்றம்

Published On 2017-10-29 07:38 GMT   |   Update On 2017-10-29 07:38 GMT
சென்னை தியாகராய நகரில் இருக்கும் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ கட்சி பொதுச் செலாளர் தீபா 3-வது நாளாக காணாததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். இதையடுத்து தினமும் அவரது வீட்டில் தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள்.

தொண்டர்களின் ஆதரவால் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை அவர் தொடங்கி அரசியலில் ஈடுபட்டார். அதன் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார். அவருக்கு ஆதரவாக கணவர் மாதவன் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார்.

தொண்டர்களை சந்தித்து பேசுவது தொடர்பாக தீபாவின் கணவர் மாதவனுக்கும், டிரைவர் ராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த குழப்பத்தில் தீபா அணிக்கு வந்த முக்கிய நிர்வாகிகள் பேரவையில் இருந்து விலகத் தொடங்கினார்கள்.

இதனால் தீபாவுக்கும் கணவர் மாதவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியது. தி.நகர் சிவஞானம் தெருவில் இருக்கும் தீபாவின் வீட்டை விட்டு மாதவன் வெளியேறினார். இருவரும் தனித்தனியாக வசித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் புகுந்து தீபா பரபரப்பை ஏற்படுத்தினார். கணவர் மாதவனையும் அங்கு வரவழைத்தார். அப்போது தீபாவின் கணவர் மாதவனும், டிரைவர் ராஜாவும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி மோதலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தீபா தனியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதன் பிறகு தீபா- மாதவன் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை தீர்த்து வைக்க உறவினர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சமீபத்தில் தீபாவும், கணவர் மாதவனும் ஒன்று சேர்ந்தனர். தீபாவின் வீட்டுக்கு மாதவன் திரும்பினார்.

இந்த நிலையில் தீபாவுக்கும் கணவர் மாதவனுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. 2 தினங்களுக்கு முன்பு மாதவன் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

தீபாவின் டிரைவர் ராஜா தனது வீட்டுக்கு வந்த போது பாதுகாவலர்கள் அவரை உள்ளே விடவில்லை. இதனால் அவர்களை ராஜா தாக்கினார். எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தார்.

இதற்கிடையே மாதவனின் புகாரில் உண்மை இல்லை என்று தீபாவும், மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒரு மனு கொடுத்தார்.

அதன் பிறகு வீடு திரும்பிய தீபா பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கப் போவதாக தகவல் பரவியது. இதனால் அவரது வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் திரண்டனர். ஆனால் அவர் பேட்டி கொடுக்கவில்லை. வீட்டில் இருந்து கிளம்பிய தீபா காரில் ஏறி வேகமாக வெளியே சென்றார். அதன் பிறகு வீடு பூட்டி கிடந்தது.

இந்த நிலையில் தீபாவின் வீடு இன்றும் பூட்டிக் கிடந்தது. 3-வது நாளாக அவரை காணவில்லை. அவரது வீட்டுக்கு தினமும் தொண்டர்கள் வருகிறார்கள். அவர்கள் தீபாவை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கிறார்கள்.

Tags:    

Similar News