செய்திகள்

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இடவசதி ஏற்படுத்தி தரக்கோரி கலெக்டரிடம் மனு

Published On 2017-10-24 20:33 IST   |   Update On 2017-10-24 20:33:00 IST
அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றை சோதனை செய்யும் ஆய்வுக்கூடத்திற்கு நோயாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் போதிய இடவசதி ஏற்படுத்தி தரக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்“ மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 402 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர், இந்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களை தூய்மையாக வைத்து கொள்ளவும், டெங்கு கொசு பரவும் விதம் குறித்து எடுத்துரைத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க தலைமை நிலைய துணை செயலாளர் மணி உள்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், அரியலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர், துணை இயக்குனர், இருக்கை மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை ஏற்படுத்தி அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும்.

மேலும் கூடுதலாக ஆய்வக நுட்புனர்களை பணியமர்த்த வேண்டும். தற்போது மருத்துவமனையில் 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 300-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்த ஆய்வகத்தில் போதிய ஆள் இல்லாததால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் குவிந்துவிடுகின்றனர்.

இதனால் கூச்சல் குழப்பம் நிலவுகிறது. மேலும் மருத்துவமனை ஆய்வுக்கூடத்திற்கு நோயாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் போதிய இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இதில், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) பாலாஜி மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News