செய்திகள்

மதுராந்தகம் அருகே பள்ளி வளாகத்தில் தூங்கிய முதியவர் கழுத்தை அறுத்து கொலை

Published On 2017-10-24 12:45 IST   |   Update On 2017-10-24 12:45:00 IST
மதுராந்தகம் அருகே பள்ளி வளாகத்தில் தூங்கிய முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள புத்திரம் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 65). விவசாயி. இவரது மனைவி ராசாத்தி அம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

இவர்களது வீட்டின் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் ராஜமாணிக்கம் தூங்குவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் அவர் பள்ளிக்கு தூங்க சென்றார். இந்த நிலையில் இன்று காலை அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் கட்டையால் தாக்கியதற்கான காயமும் இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சித்தாமூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது ராஜமாணிக்கம் அணிந்து இருந்த தங்க மோதிரம் மற்றும் அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போன் மாயமாகி இருப்பது தெரிந்தது.

நள்ளிரவில் மது அருந்த வந்த கும்பல் மோதிரம், செல்போனுக்கு ஆசைப்பட்டு ராஜமாணிக்கத்தை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்ததா என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. ராஜமாணிக்கத்துடன் யாரேனும் மோதலில் ஈடுபட்டனரா? என்ற விவரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News