செய்திகள்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: விஜயகாந்த்

Published On 2017-10-16 09:31 GMT   |   Update On 2017-10-16 09:31 GMT
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு:

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரொட்டி, பழங்கள் கொடுத்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்தார். நேற்று காலை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்த் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் டெங்கு காய்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை முறைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து ரொட்டி, பழங்கள், கொசு வலை வழங்கினார்.

அப்போது விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் முழுவதுமாக ஆய்வு செய்யவில்லை. அவர்கள் முந்திரி பருப்பும், காபியும் தான் சாப்பிட்டு சென்றனர்.

மத்திய அரசிடம் கேட்டுள்ள ரூ.256 கோடி நிவாரண நிதி மக்களுக்காக இல்லை. கொள்ளையடிப்பதற்காகவே.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் விஜயகாந்த் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன், நகர செயலாளர்கள் ரவி, ரங்கன், ஒன்றிய செயலாளர் எத்திராஜ், மார்க்கெட் பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News