செய்திகள்

நெற்குன்றத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை

Published On 2017-09-20 14:27 IST   |   Update On 2017-09-20 14:27:00 IST
நெற்குன்றத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போரூர்:

நெற்குன்றம், செல்லியம்மன் நகர் கார்த்திகை தெருவில் வசித்து வருபவர் ஆதிகேசவன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் கவுசல்யா (வயது 17). மன வளர்ச்சி குன்றி இருந்தார். மகன் அஜித், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஆதிகேசவனின் மனைவி கடந்த 10 ஆண்டுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து மகன், மகளை ஆதிகேவன் கவனித்து வந்தார்.

கவுசல்யாவுக்கு மன வளர்ச்சி குறித்த சிகிச்சை எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் ஆதிகேசவன் மன வருத்தத்தில் இருந்தார்.

கடந்த சில நாட்களாக கவுசல்யா வீட்டில் ரகளை செய்து வந்தார். இதனால் அஜித், கடந்த 4 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் அவரை கவனித்தார்.

இது ஆதிகேசவனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மனவளர்ச்சி குன்றிய மகளை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக இன்று காலை அவர், மகன் அஜித்தை கல்லூரிக்கு அனுப்பி விட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த நைலான் கயிற்றால் கவுசல்யாவின் கழுத்தை ஆதிகேசவன் நெரித்தார். இதில் சம்பவ இடத்திலேயே கவுசல்யா பரிதாபமாக இறந்தார்.

இதைத் தொடர்ந்து ஆதிகேசவன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மனவளர்ச்சி குன்றிய மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News