செய்திகள்

தீ விபத்து நிகழ்ந்த ஓ.என்.ஜி.சி. கழிவு கிணற்றை மூட அதிகாரிகள் முடிவு

Published On 2017-09-15 04:30 GMT   |   Update On 2017-09-15 04:30 GMT
நல்லாண்டார்கொல்லையில் தீ விபத்து நிகழ்ந்த ஓ.என்.ஜி.சி. கழிவு சேகரிக்கும் கிணற்றை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:

ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்காக புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு கல்லிக்கொல்லை, வானக்கண்காடு மற்றும் கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில், ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு மற்றும் கோட்டைக்காடு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக 156 நாட்களை கடந்தும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை நல்லாண்டார்கொல்லை ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றின் அருகே உள்ள கழிவு சேகரிக்கும் தொட்டியில் எதிர்பாராதவிதமாக திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ அந்த தொட்டி முழுவதும் மளமளவென பரவி எரிந்ததால் அந்த பகுதியே புகை மண்டலமானது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த கறம்பக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர். சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட கறம்பக்குடி தாசில்தார் சக்திவேலை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று கலெக்டர் அளித்த உறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவு சேகரிக்கும் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தீ விபத்து நிகழ்ந்த நல்லாண்டார்கொல்லை ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றின் அருகே உள்ள கழிவு சேகரிக்கும் தொட்டியை மூடுவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகள் இன்று நடக்கிறது. மூடாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News