செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியை எதிர்க்க வியாபாரிகள் தயாராக வேண்டும்: விக்கிரமராஜா பேச்சு

Published On 2017-09-09 15:10 GMT   |   Update On 2017-09-09 15:10 GMT
ஜி.எஸ்.டி வரியை எதிர்க்க அனைத்து வியாபாரிகளும் தயாராக வேண்டும் என்று சீர்காழியில் விக்கிரமராஜா பேசினார்.

சீர்காழி:

சீர்காழியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டதலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். சீர்காழி வர்த்தக சங்க தலைவர் சிவசுப்ரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

சென்னையில் தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். திண்டுக்கலில் வாரம் இருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டுமே ஓரளவு பசுமையாக காணப்படுகிறது. வருகின்ற 26-ந் தேதி மாநில நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது. இதில் மாநிலத் துணைத்தலைவராக சிவசுப்ரமணியன் தேர்வு செய்யப்பட இருகிறார். ஜி.எஸ்.டி. கணக்கு சமர்ப்பிக்க இரண்டு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் கணக்களை வழங்கவில்லை என்றால் 200 சதவீதம் அபராதம் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பது தொடர்பாக வர்த்தகர்களை அழைத்து பேசவில்லை. வறுத்த வேர்கடலைக்கு 15 சதவீதம் வரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்பிற்கு 5 சதவீதம் வரி. வெளிநாட்டு உணவு பொருட்களுக்கு பர்கர் பீசாவிற்கு 5 சதவீதம் வரி உள்நாட்டு உணவு பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவருடத்திற்கு 20 லட்சத்திற்குள் வியாபாரம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் வியாபாரம் செய்தால் அரசு சேல்ஸ் டாக்ஸ் கணக்கில் வந்துவிடும் அப்படி வந்தால் 300 சதவீதம் அபாராதமும், ஜெயில் தண்டனையும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் வரை வரி கிடையாது என்பதை மாற்றி 50 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஜி.எஸ்.டி வரியை எதிர்க்க அனைத்து வியாபாரிகளும் தயாராக வேண்டும். காலாவதியான பொருட்களை தனியாக வைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு பல கோடிரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 60 வயது முடிந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விபத்துக்கள் ஏற்பட்டால் வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் துரைராஜன், ஹரக்சந்த், கியான்சந்த், அன்வர்அலி, செயற்குழு உறுப்பினர் சோலை, தமிழ்ச்செல்வம், சாமிராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News