செய்திகள்

கைதானவர்கள் விடுதலை: நாகையில் இயல்பு நிலை திரும்பியது

Published On 2017-09-05 20:33 IST   |   Update On 2017-09-05 20:33:00 IST
துறைமுக பகுதியில் கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நாகையில் இயல்பு நிலை திரும்பியது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் துறைமுகத்தில் மீன் இறங்கு தளத்தில் மீன் இறக்குவது தொடர்பாக அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களிடையே நிலவி வந்த பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு துறைமுக பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது.

இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். மோதலில் 27 பேர் காயம் அடைந்தனர். இரு சக்கர வாகனங்கள், படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

சில இரு சக்கர வாகனங்கள் கடலில் தூக்கி வீசப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி நம்பியார் நகர் மீனவர்கள் நாகையில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில 135 பெண்கள் உள்பட 509 பேரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

அப்போது ஒரு பெண் மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறியல் காரணமாக நேற்று நாகையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

மறியலில் ஈடுபட்டு கைதானவர்கள் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். இதனால் நாகையில் இயல்பு நிலை திரும்பியது. இன்று காலை வழக்கம் போல் கடைகள் திறந்து இருந்தது.

அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News