செய்திகள்

அவினாசியில் பயிர்கடன் வழங்க கோரி கூட்டுறவு வங்கி முன்பு விவசாயி உண்ணாவிரதம்

Published On 2017-08-31 16:18 IST   |   Update On 2017-08-31 16:18:00 IST
அவினாசியில் பயிர்கடன் வழங்க கோரி கூட்டுறவு வங்கி முன்பு விவசாயி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி:

அவினாசி அருகே வடுகபாளையம் ராயகவுண்டன் புதூரை சேர்ந்தவர் லோகநாதன், விவசாயி.

இவர் தனது சொந்தமான 4½ ஏக்கர் நிலத்தில் சோள பயிரை பயிரிட்டுள்ளார்.

இதனால் வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் வழங்க கோரி கடந்த மாதம் லோகநாதன் விண்ணப்பித்தார்.

ஆனால் அவருக்கு வங்கியில் இருந்து பயிர்கடன் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த லோகநாதன், வங்கி முன்பு திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கினார். உடனடியாக வங்கி அதிகாரிகள் பயிர்கடனை வழங்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் பாரபட்சம் காட்டி வருவதாகவும் கூறினார்.

விவசாயி கூட்டுறவு வங்கி முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் விரைந்து வந்து லோகநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து கூட்டுறவு வங்கி செயலாளர் நடராசன் கூறும் போது, ‘‘ பயிர்கடன் ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் லோகநாதன் பயிர்கடன் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார்.

Similar News