செய்திகள்

தமிழக அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சி நினைக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2017-08-31 12:53 IST   |   Update On 2017-08-31 12:53:00 IST
தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகள் நினைக்கிறது என திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி:

சென்னை-திருச்சி இடையே 70 இருக்கைகள் கொண்ட சிறிய ரக தனியார் விமான சேவை இன்று முதல் தொடங்கியது. முதல் விமான சேவை பயணத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணித்து வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகள் நினைக்கிறது. தமிழகம் தேர்தலை சந்திக்க சரியான காலம் தற்போது இல்லை. அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா கட்சி தாங்கி பிடிக்கிறது என்கிறார்கள். புறவாசல் வழியாக நுழைய வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை.

நீதிமன்றம், கவர்னர் மற்றும் குடியரசு தலைவர் மாளிகைகளை அரசியல் மேடையாக மாற்ற பார்க்கிறது. குழம்பிய குட்டையில் மீன் பிடித்து சாப்பிட எதிர்க்கட்சி நினைக்கிறது. இப்போது தேவை தமிழகத்திற்கு நிலையான ஆட்சியே. ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் வேண்டும், அவ்வாறு இருந்தால் பா.ஜ.க. ஒத்துழைக்கும்.



மக்கள் பணியில் கட்சியின் குழப்பம் எதிரொலிக்க கூடாது. ஆட்சி நிலையாக இருக்கிறது என்ற கவர்னர் கருத்துதான் எனது கருத்து. உறுதியான நிலையான ஆளுநராக வித்யாசாகர் ராவ் உள்ளார். பொறுப்பான ஆளுநரான அவர் பொறுப்புடன் செயல்படுகிறார்.

பா.ஜ.க. அமைச்சர்களை, தமிழக அமைச்சர்கள் சந்திப்பது ஆட்சிக்காகதான். அச்சந்திப்பில் தவறில்லை. மத்திய, மாநில அரசுகள் சண்டையிட்டுக்கொள்ள வேண்டும், நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. நடிகர்கள் அரசியல் களத்திற்கு வரட்டும், மக்களை சந்திக்கட்டும். சினிமாவில் கோட்டை விட்ட பின்பு மனக்கோட்டை கட்டுகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு ஏறவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக பல பேர் வருமான வரி கட்ட தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News