செய்திகள்

கடலூரில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2017-08-28 15:36 IST   |   Update On 2017-08-28 15:36:00 IST
கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் அருகே அரசு பஸ் டிரைவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:

கடலூர் நடுவீரப்பட்டு அருகே உள்ள சிலம்பிநாதன்பேட்டை மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 41). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கடலூர் பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

கதிர்வேல் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். பாதிரிக்குப்பம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென வழிமறித்து கதிர்வேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதில் கதிர்வேலுக்கு இடது கை மற்றும் வலது தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் கதிர்வேலு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக சிலம்பிநாதன் பேட்டையை சேர்ந்த முரளி என்பவர் தன்னை வழிமறித்து அரிவாளால் வெட்டியதாக கதிர்வேல் தெரிவித்தார்.

இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News