செய்திகள்

கடலூர் விடுதி மாணவர்களிடம் பணம் வசூல் செய்த ஊழியர் சஸ்பெண்டு: கலெக்டர் நடவடிக்கை

Published On 2017-08-24 19:24 IST   |   Update On 2017-08-24 19:24:00 IST
கடலூரில் விடுதி மாணவர்களிடம் பணம் வசூல் செய்த ஊழியரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசுக்கலை கல்லூரி உள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதி உள்ளது.

கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கப்பட்டது. மாணவர்கள் விடுதியில் புதியதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ராமு தலைமையில் அதிகாரிகள் விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இது குறித்து அலுவலர் ராமு கூறியதாவது:-

கடலுர் தேவனாம்பட்டினம் அரசுக்கல்லூரி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் மாணவர்கள் ராக்கிங் செய்ததாக புகார் வந்தது. இது சம்பந்தமாக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

புதியதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களிடம் சமையல்காரர் ஆல்பர்ட் பணம் வசூல் செய்து பிரியாணி செய்துள்ளார். இது சம்பந்தமாக விசாரணை அறிக்கையை கலெக்டர் ராஜேஷிடம் வழங்கினோம்.

கலெக்டர் ராஜேஷ் உத்தரவின்பேரில் சமையல்காரர் ஆல்பர்ட் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். மேலும் இதனை கண்காணிக்க தவறிய வார்டன் (பொறுப்பு) சிகாமணியை வேறு இடத்துக்கு பணிமாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News