செய்திகள்
மோதலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி

ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு: அரியலூர் அருகே இரு தரப்பினர் மோதல் - போலீஸ் தடியடி

Published On 2017-08-19 11:33 GMT   |   Update On 2017-08-19 11:34 GMT
அரியலூர் அருகே ஏரியில் மண் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூரை அடுத்த கை.களத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் கிராமத்தின் அருகில் உள்ள பொன்னப்பன் ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் திருமாறனிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம், பொன்னப்பன் ஏரியில் முருகன் தரப்பினர் வண்டல் மண் எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு, அருகே உள்ள மேலூர் கிராம மக்கள் வந்து, எங்களுக்கு சொந்தமான ஏரியில் நீங்கள் எப்படி வண்டல் மண் எடுக்கலாம்? என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த இரு கிராமங்களை சேர்ந்தவர்களில் சிலர், தகாத வார்த்தைகளில் பேசியதால் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு கிராம மக்களும் கைகலப்பில் இறங்கினர். இதில் பொக்லைன் எந்திரத்தில் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிவிரைவு போலீசார் விரைந்து சென்று லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இரு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் கை.களத்தெருவை சேர்ந்த தேவேந்திரன்(47), மகாராஜன்(45), சின்னப்பா(54), சுந்தரேசன்(59) உள்பட 11 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முருகன் தரப்பை சேர்ந்த முருகன், தேவேந்திரன், மருதகாசி, சங்கர், சிவக்குமார் ஆகிய 5 பேரையும், ராஜேஷ் தரப்பில் ராஜேஷ், சின்னப்பா, நடராஜன், இளவரசன், பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேரையும் என மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News