வேதாரண்யம் அருகே மதுகுடிக்க பணம் கொடுக்காததால் விவசாயி தற்கொலை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகம் சரபோஜி ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48) விவசாய தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு சாகர் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.
அன்பழகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தமிழரசியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் தமிழரசி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அன்பழகன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவரை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வாய்மேடு இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன், சப்-இன்ஸ்பெக்டர் தனபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.