நாகை அருகே பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள ராதாநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் அமலநாதன். இவரது மகன் லியோ தீபன்(வயது18). இவர் மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2015-2016-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் கடும் மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார்.
பின்னர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் திருவெண்காட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். ஆனால் இவர் பள்ளிக்கு தினமும் விருப்பம் இல்லாமல் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே வந்துள்ளார். ஆனால் லியோ தீபன் பள்ளிக்கு செல்லாமல் தனது வீட்டில் இருந்த அவரது தாயாரின் சேலையை எடுத்து கொண்டு மணி கிராமத்தில் உள்ள முத்துபிள்ளை தோட்டத்திற்கு சென்று அங்கு உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருவெண்காடு இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.