செய்திகள்

மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. குழாயில் 4-வது முறையாக உடைப்பு: பொதுமக்கள் அச்சம்

Published On 2017-08-13 10:43 GMT   |   Update On 2017-08-13 10:43 GMT
மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குத்தாலம்:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டம் தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமீனில் வந்துள்ளனர். ஆனாலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஓ.என்.ஜி.சி. குழாயில் இன்று காலை 5 மணியளவில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு உருவானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

மாதிரி மங்கலம் வழியாக செல்லும் ஓ.என்.ஜி.சி.குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மாதிரிமங்கலம் வழியாக செல்லும் குழாயில் 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News