செய்திகள்

செந்துறை பெரிய ஏரியில் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு

Published On 2017-07-26 18:21 IST   |   Update On 2017-07-26 18:21:00 IST
செந்துறை பெரிய ஏரியில் பழமையான கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வருவாய்துறையினர் இந்த சிலை ஏரிக்கு எப்படி வந்தது என்று விசாரணை செய்து வருகின்றனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது செதலவாடி கிராமம். இங்கு உள்ள பெரிய ஏரியில் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன்கள் சிவசக்தி, கர்ணன் ஆகியோர் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது காலில் பெரிய கல் தென்பட்டது. இதையடுத்து சிவசக்தி, கர்ணன் ஆகியோர் அவர்களது உறவினரான பாலுவிடம் இதுகுறித்து கூறினர். பின்னர் பாலு மற்றும் கிராமமக்களும் வந்து ஏரியில் இருந்து பெரிய கல்லை வெளியே எடுத்து வந்தபோது தான் அது பழமையான அம்மன் சிலை என்பது தெரியவந்தது.

மேலும் அதன் அருகிலேயே உடைந்த நிலையில் மேலும் ஒரு சிலை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து அம்மன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இது குறித்து செந்துறை தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வருவாய்துறையினர் இந்த சிலை ஏரிக்கு எப்படி வந்தது என்று விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News