செய்திகள்

பவானியில் கார் டிரைவரை கொன்ற மனைவி போலீசில் சரண்

Published On 2017-07-26 15:53 IST   |   Update On 2017-07-26 15:53:00 IST
பவானியில் கார் டிரைவரை கொன்ற மனைவி போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி மேட்டூர் ரோடு காமராஜர் நகரில் பின்புறம் வசித்தவர் குமார் என்கிற குமாரசாமி (வயது 35).வாடகை கார் டிரைவர்.

இவரது மனைவி வளர்மதி (35). இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை விட்டு பிரிந்தவர். கடந்த 13 வருடங்களுக்கு முன்பு வளர்மதியும், குமாரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் வசந்த் என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் குமாருக்கும், வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.

அதேபோல நேற்று இரவும் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வளர்மதி அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து குமாரை தாக்கினார்.

இதில் அதே இடத்தில் குமார் பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால் வளர்மதி அங்கிருந்து ஓடி தலைமறைவானார்.

தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து வளர்மதியை தேடி வந்தனர். இந்த நிலையில் வளர்மதி பவானி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

குமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இது வளர்மதிக்கு தெரியவந்தது. இதன் காரணமாகவே 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News