செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-07-22 16:27 GMT   |   Update On 2017-07-22 16:27 GMT
ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் காலனி தெருவில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள அங்கராயநல்லூர் காலணி தெருவில் கடந்த ஒருவாரமாக குடிநீர் பற்றாக்குறை நிலவிவந்தது. ஊராட்சியில் மொத்தம் 5ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. காலனி தெரு விற்கென தனியாக ஒரு ஆழ்குழாய் கிணறு இயங்கிவந்தது. கடந்த ஆறுமாதமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஊராட்சி நிர்வாகத்தால் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறு தண்ணீரின்றி வறண்டது.

மோட்டார் ரிப்பேர் ஆனதால் கடந்த ஆறு மாதமாக குடிநீர் இல்லாமல் உத்திரக்குடி சென்று பொதுமக்கள் குடிநீர் எடுத்து வந்தனர். மேலும் அவ்வழியே செல்லும் கூட்டுகுடிநீர் திட்ட குழாயிலிருந்து வெளியேறும் கசிவுநீரை பயன்படுத்தி வந்தனர்.

கசிவுநீரை கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள் சரிசெய்து தண்ணீர் கசிவில்லாமல் மூடப்பட்டது. மேலும் அதிக ஆழமுள்ள புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கவேண்டும். சாலையில் இருபுறமும் தண்ணீர் பிடிக்க வசதியாக பைப் லைன் அமைத்து தரவேண்டும் என கோரி ஜெயங்கொண்டம் - கும்பகோணம் சாலை அங்கராயநல்லூர் காலனி தெருவின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் மலரழகன், மாரியப்பன், ஜெயங்கொண்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இன்னும் இரண்டு நாட்களுக்கு டிராக்டர் மூலம் தற்காலிகமாக குடிநீர் வழங்கியும், புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News