செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் வேளாண் துறை வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2017-07-20 21:24 IST   |   Update On 2017-07-20 21:24:00 IST
அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர்:

அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியங்களில் வேளாண்மைத்துறை சார்பில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வன்னம்புதூர் கிராமத்தில் கரும்பில் சொட்டு நீர் பாசன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் அதன் செயல்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், திருமழப்பாடி கிராமத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டம் 2017-ன் கீழ் நடவு இயந்திரத்தின் மூலம் நெற்பயிர் நடவுப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அரியலூர் ஒன்றியம், சீனிவாசபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயிகளின் நிலங்களில் கடலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்த கலெக்டர், விவசாயி ஜெயராமன் என்பவரிடம் கடலைப்பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) மனோகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) இளங்கோவன், துணை இயக்குநர் தோட்டக் கலைத்துறை அன்புராஜன், உதவி இயக்குநர் (பொறுப்பு) சாந்தி, வேளாண் அலுவலர்கள் வடிவேல், அமுதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News