செய்திகள்

காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் மகன் இன்று மீண்டும் போலீசில் ஆஜர்

Published On 2017-07-19 14:50 IST   |   Update On 2017-07-19 14:50:00 IST
ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று காலை சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் ஆஜரானார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது ஆள் கடத்தல், கொலை, நிலம் அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. போலீசார் தேடுவதை அறிந்ததும் ஸ்ரீதர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.

இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் ஸ்ரீதரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

இதற்கிடையே சட்ட விரோதமாக பறித்த ஏராளமான சொத்துக்களை அவர் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் ஸ்ரீதர் சேர்த்து வைத்து இருப்பது தெரிந்தது. அவற்றை அமலாக்க துறையினர் முடக்கி உள்ளனர்.

கடந்த வாரம் லண்டனில் இருந்து வந்த ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமாரிடம் காஞ்சீபுரம் போலீசார் ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சந்தோஷ் குமார் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது போலீசார் ஒரு ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அப்போது அரசு வக்கீல் வாதிட்டபோது ‘‘சந்தோஷ்குமாரிடம் இருந்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். அதில் பல ஆதாரங்கள் உள்ளன. எனவே அவரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த அவசியமாகிறது என்று’ தெரிவித்தார்.

இதனை ஏற்று நீதிபதி, சந்தோஷ்குமாரிடம் 14 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை காஞ்சீபுரம் போலீசார் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டார்.

அதன்படி இன்று காலை சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் சந்தோஷ்குமார் ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரி மணிமாறன் விசாரணை நடத்தினார்.

இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, கோர்ட்டு உத்தரவுப்படி சந்தோஷ் குமாரிடம் விசாரணை நடக்கிறது. சனி, ஞாயிறு நீங்கலாக 14 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த விசாரணை முடிவில் ஸ்ரீதர் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

Similar News