குரோம்பேட்டையில் கார்களில் வைத்திருந்த ரூ.3 லட்சம்-லேப்டாப் கொள்ளை
தாம்பரம்:
குரோம்பேட்டையில் கண்ணாடியை உடைத்து காருக்குள் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் லேப்-டாப் கொள்ளையடிக்கப்பட்டது.
கொல்கத்தாவை சேர்ந்தவர் சுந்தர் மான்டெல் (48). டாக்டராக இருக்கிறார்.இவர் தனது மகளை சென்னையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் சேர்க்க வந்திருந்தார்.
மகளை கல்லூரி விடுதியில் சேர்த்து விட்டு நேற்றுஇரவு கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் திரும்பினார். அதற்காக வாடகை கார் மூலம் விமான நிலையம் செல்லும் வழியில் குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் டிரைவருடன் சாப்பிட சென்றார்.
அப்போது மர்ம நபர்கள் காரின் பின்புற கதவின் கண்ணாடியை உடைத்து உள்ளே பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்டிளயடித்து சென்று விட்டனர்.
இதே போன்று குரோம்பேட்டையில் மற்றொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. செங்கல்பட்டை சேர்ந்தவர் சுந்தரமாணிக்கம் (45). கட்டுமான தொழில் அதிபரான இவர் நேற்று தனது விலை உயர்ந்த காரில் குரோம்பேட்டை வந்து இருந்தார்.
அங்குள்ள ஒரு ‘ஷோரூம்’ முன்பு காரை நிறுத்திவிட்டு கைகடிகாரம் வாங்க சென்றார். அப்போது இவரது காரின் பின்புற கதவின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த விலை உயர்ந்த லேப்டாப் மற்றும்அதில் வைத்திருந்த ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள்.