செய்திகள்
பிணமாக கிடந்த தண்டபாணி.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் காயத்துடன் பிணமாக கிடந்த வங்கி ஊழியர் கொலையா?: போலீஸ் விசாரணை

Published On 2017-07-15 16:46 IST   |   Update On 2017-07-15 16:46:00 IST
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் காயத்துடன் பிணமாக கிடந்த வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாளத்தில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.

இந்த வங்கியில் உதவியாளராக பணிபுரிந்தவர் தண்டபாணி (வயது 59). 17 வருடமாக அவர் இந்த வங்கியில் பணிபுரிந்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்த இவர் இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வங்கியின் அருகே பிணமாக கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. எனவே ஏராளமானோர் அங்கு கூடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இது பற்றி அறிந்ததும் சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த தண்டபாணியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தண்டபாணியின் கன்னம், கால்களில் காயம் காணப்பட்டது. அந்த இடத்தில் ரத்தம் உறைந்தும் கிடந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

போலீசார் தண்டபாணி கீழே விழுந்து இறந்துள்ளதாக தெரிவித்தனர். தண்டபாணியின் கன்னம், கால்களில் காயம் இருப்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தண்டபாணிக்கு குடிப்பழக்கம், போதை மருந்து அருந்தும் பழக்கம் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே அதிக மது, போதை காரணமாக தண்டபாணி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் இன்று ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News