செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து வந்த சென்னை விமானத்தில் பயணி மரணம்

Published On 2017-07-13 16:23 IST   |   Update On 2017-07-13 16:23:00 IST
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு வந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்து கிடந்தார்.
ஆலந்தூர்:

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த மயிலாடுதுறையை சேர்ந்த ஹமானுல்லாவுக்கு (70) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இது குறித்து விமான ஊழியர்கள், சென்னையில் உள்ள விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் விமானம் தரையிறங்கியதும் ஹமானுல்லாவை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரிந்தது.

இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் இருந்து டெல்லி வழியாக நியூயார்க் செல்லும் விமானம் 256 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது. அதில் எரிபொருள் நிரப்பும் பகுதி அருகே கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த விமானம் புறப்படுவது ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

இன்று காலை டெல்லி செல்லும் 140 பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். நியூயார்க் செல்லும் பயணிகள் இன்று இரவு புறப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News