செய்திகள்

கோட்டையை முற்றுகையிட்ட ஓய்வுபெற்ற போலீசார் 30 பேர் கைது

Published On 2017-07-06 14:18 IST   |   Update On 2017-07-06 14:18:00 IST
போலீசாரின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஓய்வுபெற்ற போலீசார் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசார் இன்று கோட்டையை முற்றுகையிடப்போவதாக கிடைத்த தகவலையடுத்து தலைமை செயலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் ஓய்வுபெற்ற போலீசார் இன்று தலைமை செயலகத்துக்கு மனு கொடுப்பதற்காக காலையில் இருந்தே வந்தனர். அவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர்.

காலை 10.30 மணி அளவில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் உடனடியாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான செல்வஅழகன், பணி ஓய்வு பெற்ற போலீசார் சிலருடன் கோட்டைக்கு திடீரென வந்தார். 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் கொண்டு வந்தார்.

தலைமை செயலகத்துக்கு அருகில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், காவல் துறையில் உரிய பதவி உயர்வு அளிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

போலீசாரின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், வார விடுமுறை அளிக்க வேண்டும், பணியின் போது மரணம் அடைந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் விரைந்து வந்து போதும்... போதும்.. என்று கூறினார். இதற்கு செல்வஅழகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பேட்டியின் போது திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

இருப்பினும் செல்வ அழகன் தொடர்ந்து பேட்டி அளித்து கொண்டே இருந்தார். முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் அதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.



கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளே வாங்கி கொண்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வஅழகனும் போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டார்.

இன்று காலையில் இருந்து மதியம் வரையில் கோட்டையை முற்றுகையிட வந்த முன்னாள் போலீசாரும், அவர்களது குடும்பத்தினரும் 30 பேர் வரை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினரும் (ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர்) பங்கேற்றதாக தெரிகிறது. ஆனால் கைதானவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.

இந்த போராட்டத்தில் தற்போது பணியில் இருக்கும் பெண் போலீசார் இருவரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் போராட்டத்திற்கு சீருடை அணிந்து செல்லாமல் சாதாரண உடையில் சென்றதாகவும், அவர்களும் போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல் பரவி இருக்கிறது.

கோட்டையில் இன்று நடந்த போலீசாரின் திடீர் போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.

கோட்டை அருகில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் செல்வஅழகன் பேட்டி அளித்த காட்சி.

Similar News