செய்திகள்

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் 11-ந் தேதி விரிவான விசாரணை

Published On 2017-07-06 04:01 IST   |   Update On 2017-07-06 04:01:00 IST
தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விரிவான விசாரணை நடக்கிறது.
புதுடெல்லி:

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விரிவான விசாரணை நடக்கிறது.

தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “கடந்த பிப்ரவரி 18-ந் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை சபாநாயகர் நிராகரித்தது தவறான நடவடிக்கை. ஜனநாயக நடைமுறைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இந்த நம்பிக்கை தீர்மானத்தை, செல்லாதது என அறிவிக்க வேண்டும். மேலும் ரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.



இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கே.பாண்டியராஜன் தரப்பில் மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.

அவர் தனது வாதத்தில், “தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக கவர்னர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது தொடர்பாக கவர்னருக்கு ஜூன் மாதத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

அப்போது, நீதிபதி தீபக் மிஸ்ரா, என்ன நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கோபால் சுப்பிரமணியம் கூறியதாவது:-

புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வகையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது தொடர்பாக சபாநாயகருக்கும் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சி தரப்பில் கலந்துகொண்ட 122 பேரும் ஏதோ ஒருவகையில் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

முன்னாள் முதல்-அமைச்சரும் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எந்த வகையிலும் வெளிப்படைத்தன்மை இன்றி அனைத்தும் நிழல் காரியங்களாக நடந்தேறின. இந்த நிலையில் நம்பிக்கைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தும் அவர் செவி சாய்க்க மறுத்து விட்டார். எதிர்க்கட்சியினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு அரை மணி நேரத்தில் அனைத்தையும் முடித்து விட்டனர். அன்று இருந்த சூழ்நிலையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் மட்டுமே நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் நிலைநாட்டப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு நீதிபதி தீபக் மிஸ்ரா ரகசிய வாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டசபை விதிகளில் இடமிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கோபால் சுப்பிரமணியம், “ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதியில் இடமில்லாமல் இருக்கலாம். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ரகசிய வாக்கெடுப்பை நடத்த விதிமுறையில் எங்கும் தடை விதிக்கப்படவில்லை” என்று கூறினார்.

அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, “இந்த அம்சம் தொடர்பாக வரும் 11-ந் தேதி விரிவாக விசாரிக்கலாம். அன்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கோர்ட்டில் விசாரணையின்போது ஆஜராகியிருக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார். 

Similar News