செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வெற்றி பெற செய்வோம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

Published On 2017-07-02 02:57 GMT   |   Update On 2017-07-02 02:57 GMT
ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வெற்றி பெற செய்வோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வந்த பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. அம்மா அணி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இன்றைய தினம் பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வரும் 17-7-2017 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நமது இயக்கமான அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடைய பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெறுவதற்கும், வாக்குகளை சேகரிக்கவும் வருகை தந்துள்ளார்.

ஜெயலலிதா, பிரதமர் மோடியுடன் நல்லுறவை வைத்திருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜெயலலிதாவின் ஆசியுடன் நான் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின், பிரதமரை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியபோது, அவரும் தமிழக நலனில் அக்கறை கொண்டு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார். பிரதமர் அ.தி.மு.க.வின் ஒத்துழைப்பை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு நல்குமாறு கோரியிருந்தார்.



தற்போது இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், அ.தி.மு.க. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆதரவினை கோர வருகை தந்துள்ளார். ராம்நாத் கோவிந்த் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பினாலும், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு குணங்களாலும் தான் எதிர்கொண்ட சமூக பொருளாதார தடைகளை தகர்த்தெறிந்தவர். 2 முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும், பீகார் மாநிலத்தின் கவர்னராகவும் திறம்பட பணியாற்றியவர், தற்போது நம்மிடையே ஆதரவு கோரி வந்துள்ளார்.

நாமும் அவரை ஆதரித்து ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாம் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பாரத தேசத்தின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற செய்வோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்வோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Tags:    

Similar News