பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் சிறப்பு திட்டமான சமூக பாதுகாப்பு திட்டத்தில் துணை வட்டாட்சியர் மற்றும் தட்டச்சர் அல்லது கணினி இயக்குபவர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசு விழா என்ற பெயரில் வருவாய்ததுறை அலுவலர்களை வேலைக்கு வரச்சொல்லி பணிச்சுமை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தற்போது பிறப்பு, இறப்பு பதிவுகள் மற்றும் நிலச்சீர்த்த சட்ட தொடர்பான அதிக எண்ணிக்கையிலான கோப்புகள் நிலுவையில் உள்ளதால் கோட்டாட்டாசியர் அளவில் துணை வட்டாட்சியர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும்.
தேர்தல் நடைபெறும் காலம் தவிர்த்து மற்றக் காலங்களில் தேர்தல் அலுவலர்களை பணி மாறுதல் செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு திட்டத்திலுள்ள குளறுபடிகளை களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டு. என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். செந்துறை வட்டத் தலைவர் வேலுமணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.