செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வந்தால் புதிய நீதிக்கட்சி ஆதரிக்கும்: ஏ.சி.சண்முகம்

Published On 2017-06-26 12:44 IST   |   Update On 2017-06-26 12:44:00 IST
ரஜினி அரசியலுக்கு வந்தால் புதிய நீதிக்கட்சி ஆதரிக்கும் என ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ‘நீட்’ தேர்வு முறை என்பது முற்றிலும் தவறானது. நாடு முழுவதும் ஒரே முறையான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தென்னிந்தியாவில் தான் 80 சதவீத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. 20 சதவீத மருத்துவ கல்லூரிகள் தான் வட இந்தியாவில் உள்ளது.

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் கல்வி முறை மாறுபட்டுள்ளது. ஆனால் மத்திய பாடத்திட்டத்தின் படி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் கிராமபுறங்களில் உள்ள ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 85 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும். மீதமுள்ள 15 சதவிகித இடம் தான் மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பிளவு பட்டிருக்கும் அ.தி.மு.க. அணிகள் ஒன்று சேர வேண்டும். அப்போது தான் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் கனவு நினைவாகும். ஜிஎஸ்டி. வரிவிதிப்பால் 40 சதவிகிதம் பாதிப்பு ஏற்படும். இதனால் விலைவாசி அதிகரிக்கும். தற்போது தமிழகத்தில் சரியான அரசியல் தலைவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. அந்த இடத்திற்கு ரஜினி வந்தால் புதிய நீதி கட்சி ஆதரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News