மண்ணிவாக்கத்தில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலையில் 2 பேர் கைது
கூடுவாஞ்சேரி:
வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் எம்.ஜி. முருகன். இவர் புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அமைப்பாளராக இருந்தார்.
கடந்த 17-ந்தேதி மதியம் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று விட்டு முருகன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 8 பேர் கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியது.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் முருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இக்கொலை தொடர்பாக மண்ணிவாக்கத்தை சேர்ந்த கவாஸ்கர், மணிகண்டன், அஜித், செல்வகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த போகி கிருஷ்ணா, அவரது மகன் சுபாஷ் ஆகியோர் எம்.ஜி.முருகன் கொலையில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் கூலிப்படையை ஏவி முருகனை கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போகி கிருஷ்ணாவின் உறவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அதில் முருகனுக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது. மேலும் அவர் வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்து இருந்தார். இது போகி கிருஷ்ணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.