வண்டலூர் அருகே ஏரியில் முதலை நடமாட்டம்: கிராம மக்கள் பீதி
தாம்பரம்:
பெருங்களத்தூர் அருகே நெடுகுன்றம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வண்டலூர் உயிரியல் பூங்கா பின்புறம் உள்ள வனப் பகுதியில் அமைந்து இருக்கிறது.
இக்கிராமத்தில் உள்ள ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் அப்பகுதி மக்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.
இரவு ஏரியில் வலைகளை போட்டு விட்டு காலையில் மீன்பிடிப்பார்கள். அது போல் இன்று காலை ஏரியில் மீன் பிடிக்க வந்தபோது வலையில் முதலை ஒன்று சிக்கி கொண்டு துள்ளியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 6 அடி நீளமுள்ள அந்த முதலை வலைகளை கடித்து கொண்டு தண்ணீருக்குள் சென்றுவிட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிராமமக்கள் ஏரியில் திரண்டு விட்டனர்
தினமும் மீன் பிடிக்கும் ஏரியில் முதலை நடமாட்டம் உள்ளதால் கிராமமக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் அருகில் உள்ள வண்டலூர் பூங்காவில் முதலைகள் குஞ்சு பொரிக்கும் போது அதை பறவைகள் தூக்கி கொண்டு வந்து ஏரியில் போட்டு விடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.