வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்ததை தட்டிகேட்ட விவசாயிக்கு கத்திக்குத்து
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த பக்கிரி சாமி மகன் செந்தில் (வயது 38) விவசாயி. இவரது தம்பி ராஜேந்திரனின் மனைவி ஜெய்சூரியா. இவர் வேதாரண்யம் அரசு கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் நாலு வேதிபதி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் படித்து வருகிறார். இவர் பஸ்சில்செல்லும் ஜெய்சூரியாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெய்சூரியா வீடு வரை மோட்டார் சைக்கிளில் சென்று நோட்டமிட்டு உள்ளார். இதனை கண்ட செந்தில், விக்னேசை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் செந்திலை கத்தியால் குத்தி உள்ளார். மேலும் விக்னேசுடன் வந்த இன்னொருவர் கம்பியால் செந்திலை தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த செந்திலை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவபாலன், ரோசினின் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செந்திலை தாக்கிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் புஷ்பவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.