செய்திகள்

ஈரோட்டில் மோடி உருவ பொம்மை எரிக்க முயற்சி: மாட்டு இறைச்சியை திண்ற 25 பேர் கைது

Published On 2017-05-29 17:02 IST   |   Update On 2017-05-29 17:02:00 IST
ஈரோட்டில் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து அவர்கள் இன்று பிரதமர் மோடி உருவ பொம்மை எரிக்கப்படும் என்றும், மாட்டுக்கறி சாப்பிடுவோம் என்றும் கூறி இருந்தனர்.

அதன்படி சுமார் 20-க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே திரண்டனர்.

விஸ்வநாதன், இளம் புலிகள் செயலாளர் ராமு, துணை செயலாளர் செம்பன், பாலச்சந்திரன், பிரவின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் உருவ பொம்மையை பறித்து எரிக்க முயன்றதை தடுத்தனர்.

இந்த நேரத்தில் அதே இடத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மற்றொரு குழுவினர் மாட்டு இறைச்சியை தின்றனர். மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் இன்று பரபரப்பு நிலவியது.

Similar News