செய்திகள்
பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா பேசிய காட்சி.

தமிழகத்தில் போர் நடந்துகொண்டு இருப்பது ரஜினிக்கு தெரியவில்லை: பழ.கருப்பையா

Published On 2017-05-24 04:48 GMT   |   Update On 2017-05-24 04:48 GMT
இந்தி திணிப்பு, இந்துத்துவா கொள்கை என தமிழகத்தில் போர் நடந்துகொண்டு இருப்பது ரஜினிக்கு தெரியவில்லை என ஈரோட்டில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பழ.கருப்பையா பேசினார்.
பு.புளியம்பட்டி:

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-ம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி திரு.வி.க. திடலில் நடைபெற்றது.

நகர செயலாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், முன்னாள் நகராட்சித் தலைவர் அன்பு முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர துணைச்செயலாளர் ஈஸ்வர முர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டு பேசியதாவது:-

அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க, ஜெயலலிதா நாமம் வாழ்க என கூறியவர்கள் இன்று மோடி நாமம் வாழ்க என்று டெல்லி சென்று பிரதமரை சந்திக்கின்றனர்.


ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தால் உடனே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். அ.தி.மு.க. எடப்பாடி, ஓ.பி.எஸ்., தீபா அணி என பிரிந்து கிடக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் போர் துவங்கட்டும் என்கிறார். தமிழகத்தில் இந்தி திணிப்பு, இந்துத்துவா கொள்கை என போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது தெரியவில்லையா?

சினிமாக்காரர்களால் தமிழ்நாடு குட்டிச்சுவரானது. முதலில் எம்.ஜி.ஆர். வந்தார். பின்னர் ஜெயலலிதாவால் தமிழகம் பின்தங்கியது. விஜயகாந்த் எங்கு போனாரென்று தெரியவில்லை.

1937-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. தி.மு.க. ஆட்சியில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகள் மட்டுமே இருக்க வேண்டும் இந்தி வேண்டாம் என அண்ணா அறிவித்தார்.

இன்று தமிழ்நாட்டில் வெற்றிடம் உள்ளது. அதை நிரப்ப பல பேர் ஆசைப்படுகின்றனர். தி.மு.க. ஒரு ஆலமரம். இன்னும் 50 ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாத சக்தியாக தமிழகத்தை வழிநடத்தும் வலிமையான இயக்கமாக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News