செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை: சூறாவளி காற்றில் ரோட்டில் மரங்கள் முறிந்து விழுந்தது

Published On 2017-05-23 13:15 GMT   |   Update On 2017-05-23 13:15 GMT
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ரோட்டோரம் உள்ள மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் ஈரோடு-கோவை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக கோடை மழை கொட்டி வருகிறது.

நேற்று வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 102 டிகிரி வரை வெயில் அடித்தது. மாலை 5 மணிக்குப் பிறகு சீதோ‌ஷண நிலை தலைகீழாக மாறியது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் திடீரென கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தது. பிறகு திடீரென சுழட்டி... சுழட்டி சூறாவளி காற்று வீசியது. சுமார் 10 நிமிடம் கழித்து மழை பெய்யத் தொடங்கியது. சாரல் மழையாக பெய்யத் தொடங்கிய மழை பிறகு வலுத்து பெய்யத் தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு கோபி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அதிகபட்சமாக 33 மி.மீட்டர் மழை பெய்தது.

பெருந்துறை பகுதியிலும் சூறாவளி காற்றுடன் நேற்று இரவு மழை பெய்தது. பெருந்துறை அடுத்த மகாராஜா கல்லூரி அருகே நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ரோட்டோரம் உள்ள 2 மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் ரோட்டில் யாரும் போகாததால் அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை. ரோட்டில் அடுத்தடுத்து 2 மரங்கள் விழுந்ததால் ஈரோடு-கோவை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

மேலும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். அவர்கள் ரோட்டில் கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர்.

சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு மரங்கள் அகற்றப்பட்டது. இதையொட்டி போக்குவரத்து சீரானது.
Tags:    

Similar News