செய்திகள்

கருணாநிதி வைர விழா: நிதிஷ்குமார் லல்லு பிரசாத் வருகை

Published On 2017-05-18 11:20 IST   |   Update On 2017-05-18 11:20:00 IST
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபையில் 1957-ம் ஆண்டு முதல் தற்போது வரை உறுப்பினராக இருந்து வருகிறார். அவரது சட்டமன்ற பணி 60 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவை மிக பிர மாண்டமாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

1957-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்ற கருணாநிதி ஒரு தடவை கூட தோல்வியைத் தழுவாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 93-வது பிறந்த தினம் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

அப்போது கருணாநிதியின் சட்டசபை வைர விழாவையும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தியா முழுவதும் பாரதீய ஜனதா, அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் தி.மு.க. மூத்த தலைவர்கள், மற்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.

கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் வரவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர் சார்பில் ராகுல்காந்தி சென்னை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருநாவுக்கரசர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரும் கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

கேரளா,ஒடிசா, டெல்லி மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அம்மாநில கட்சிகளின் தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் உள்ள மூத்த அரசியல் வாதிகளில் முதன்மையாக இருப்பவர் கருணாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து மாநிலங்களில் இருந்தும் வைர விழாவுக்கு அரசியல் தலைவர்கள் வர உள்ளனர்.

Similar News