செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிரட்டல் கடிதம் எழுதிய மர்ம வாலிபர் யார்? போலீசார் விசாரணை

Published On 2017-05-07 15:58 IST   |   Update On 2017-05-07 15:58:00 IST
அல்கொய்தா பெயரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிரட்டல் கடிதம் எழுதிய மர்ம வாலிபர் யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிதம்பரம்:

சிதம்பரம் கீழவீதியில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டல் நுழைவு வாசலில் தபால் அட்டை ஒன்று கிடந்தது. அது அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் முகவரிக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

மேலும் அதில் ‘சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இது குறித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கு சென்று, இன்ஸ்பெக்டர் அம்பேத்கரிடம் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில், வெடிகுண்டு சோதனை நிபுணர் பாபு தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு விரைந்தனர். பின்னர், கோவிலில் ஆயிரங்கால் மண்டபம், தீர்த்தகுளம் என அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.

மேலும் மோப்ப நாய் ஜேக் உதவியுடன் கோவிலில் சோதனை செய்யப்பட்டது. இதில் வெடிகுண்டுகள், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.


கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அல்கொய்தா பெயரில் கடிதம் அனுப்பிய மர்ம வாலிபர் யார்? என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோவில் வளாகத்திலும், 4 தேரோடும் வீதிகளிலும் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிபவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

இந்த கடிதத்தை மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் யாராவது அனுப்பி இருக்கலாம் அல்லது கோவிலில் உள்ளவர்களுக்கும், சாமி கும்பிட வந்தவர்களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அதை முன்விரோதமாக கொண்டுகூட இதுபோன்று மிரட்டல் கடிதம் அனுப்பி இருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளில் எழுத்து பிழைகள் அதிக அளவில் உள்ளன. அல்கொய்தா என்ற வார்த்தையை கூட தவறாக எழுதி, அதன் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், இதை அலட்சியமாக விட முடியாது.

தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவிலை கண்காணித்து வருகிறோம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடைமைகள் சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மிரட்டல் கடிதம் விடுத்த நபரை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.

Similar News