செய்திகள்

‘நீட்’ தேர்வை எதிர்ப்பது கல்வி தரத்தை குறைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2017-05-02 13:13 IST   |   Update On 2017-05-02 15:14:00 IST
தமிழகத்தில் நீட் தேர்வு நிரந்தரமாக வேண்டாம் என்று சொன்னால் கல்வி தரத்தை உயர்த்த மாட்டோம் என்று பொருள் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராடுவதற்கும், மற்றவர்கள் போராடுவதற்கும் வித்தியாசம் உண்டு.

மருத்துவர்கள் போராட்டத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு நிரந்தரமாக வேண்டாம் என்று சொன்னால் கல்வி தரத்தை உயர்த்த மாட்டோம் என்று பொருள்.

50 ஆண்டு கால திராவிட கட்சிகள் ஆட்சியில் கல்வி தரம் தாழ்ந்து விட்டது. மாநில அரசுதான் 85 சதவீத இடங்களை நிரப்பப்போகிறது. 15 சதவீத இடத்தைத்தான் விட்டுக் கொடுக்க போகிறார்கள்.

அதே நேரத்தில் மற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் 15 சதவீதம் வாய்ப்புள்ளது. மாநில சுயாட்சி என்பது ஆட்சிக்கு வருவதற்கும், தமிழர்களை முட்டாள் ஆக்குவதற்கும் பயன்படுத்தக் கூடிய வார்த்தை.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தி.மு.க. பயன்படுத்திய ஆயுதங்களை தற்போது பயன்படுத்தி வருகிறது. அது துருபிடித்துபோய் விட்டது. தி.மு.க.வின் சாயம் வெளுத்து விட்டது.

தமிழ்நாட்டு மக்களுக்கு 50 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள். அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இரு மடங்காகி இருக்கிறது. என்ன காரணம்? நீட் நிரந்தரமாக வேண்டாம் என்பது தமிழர்களை திட்டமிட்டு அழிக்க கூடியது.

கழகங்கள் செய்த தவறுகளை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று மக்கள் ஏங்குகிறார்கள். புதிய தேடலை தேட தொடங்கி இருக்கிறார்கள்.


10 மாதங்களாக ஆளுங்கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. அப்படி இருந்தும் யாராவது தி.மு.க. பக்கம் போக விரும்புகிறார்களா? இரண்டு கழகங்களிலும் சேர இளைஞர்களோ மாணவர்களோ தயார் இல்லை. தி.மு.க. மூழ்கி கொண்டிருக்கும் கப்பல் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கழகங்களின் காலம் முடிந்து விட்டது. கலைஞரின் ஆளுமை அபரிமிதமாக இருந்ததை மறுக்க முடியாது. இப்போது நிலைமை மாறி விட்டது. பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எதுவும் பலிக்கவில்லை. அதனால்தான் எதற்கெடுத்தாலும் பா.ஜனதாவை பழிபோட்டு தன் காலை பலப்படுத்த பார்க்கிறார்கள். எந்த வித்தையும் இனி தமிழக மக்களிடம் எடுபடாது.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது குற்றம் சொல்வது நியாயமில்லை. தமிழகத்தையும், தமிழர்களையும் வளர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் வருமான வரித்துறையினர் தன்னிச்சையாக அவர்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் பா.ஜனதா வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் ஆட்சி அமைக்கும். இதன் காரணமாகவே பா.ஜனதா மீது திராவிட கட்சிகள் குறை கூறி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News