செய்திகள்
ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது எடுத்தபடம்.

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மக்களோடு இணைந்து த.மா.கா.போராடும்: வாசன்

Published On 2017-04-29 12:47 IST   |   Update On 2017-04-29 12:47:00 IST
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்கடைகளை அரசு எங்கும் திறக்கக்கூடாது. மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மக்களுடன் இணைந்து த.மா.கா. போராடும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கடலூர்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கடலூர் வந்தார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்கடைகளை அரசு எங்கும் திறக்கக்கூடாது. மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மக்களுடன் இணைந்து த.மா.கா. போராடும்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பக்கூடிய அளவில் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு தான் தமிழகம் முழுவதும் உள்ளது. இதனை சரிசெய்ய தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.


மேலும் குடிநீர் பிரச்சனை ஏற்படாதவகையில் மின்சாரம் சரிசெய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைக்கு போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை கட்டாமல் இருந்தால் ஜப்தி நடவடிக்கை இருக்க கூடாது. மேலும் விவசாயிகள் இறந்ததற்கு வறட்சி மட்டும் காரணமில்லை. சொந்த பிரச்சனையும் காரணம் என நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது விவசாயிகளை இழிவுபடுத்தும் செயலாகும்.

எனவே தமிழக அரசு தங்களது அறிக்கையை மாற்ற வேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News