செய்திகள்

தாளவாடி அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

Published On 2017-04-24 07:50 GMT   |   Update On 2017-04-24 08:04 GMT
தாளவாடி அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகள் தண்ணீரால் நிரம்பின.

வெயிலில் தவித்துக் கொண்டிருந்த அந்த பகுதி மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்தது. வெகு நாளைக்கு பிறகு குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியதால் அந்த பகுதி சிறுவர்களுக்கு கொண்டாட்டமாகிபோனது.

அவர்கள் அந்த குளம், குட்டைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். அதேபோல நேற்று அந்த பகுதியை சேர்ந்த சுதீப், சித்தராஜ் ஆகிய 2 பேரும் அங்குள்ள குட்டையில் குளிக்க சென்றனர்.

அவர்கள் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தனர். குளிக்க சென்ற அவர்கள் நேற்று மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பயம் அடைந்த அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

நண்பர்களிடம் விசாரித் தபோது 2 மாணவர்களும் குளிக்க சென்றதை பெற்றோர் அறிந்தனர். ஆனால் எந்த பகுதிக்கு சென்றனர் என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் பன ஹள்ளி என்ற இடத்தில் உள்ள குட்டையில் ஒரு பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் அங்கு விரைந்து ஓடினர்.

அவர்கள் சென்று பார்த்த போது குட்டையில் பிணமாக மிதந்தது காணாமல் போன மாணவர்களில் ஒருவர் என்பது தெரியவந்தது. அவரது உடலை குட்டையில் இருந்து அந்த பகுதி பொது மக்கள் மீட்டனர்.


மாணவரின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

ஒன்றாக குளிக்க சென்ற மாணவர்களில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதால் இன்னொரு மாணவரும் குட்டையில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் தாளவாடி போலீஸ் இன்ஸ் பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர்.

அவர்களும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலரும் குட்டையில் இறங்கி இன்னொரு மாணவரின் உடலை தேடி வருகிறார்கள். அந்த மாணவரின் பெற்றோரும், உறவினர்களும் குட்டையின் கரையில் அமர்ந்து கதறி அழுதது பார்ப்போர் மனதை கரைப்பதாக இருந்தது.

Similar News