செய்திகள்

கடை மூடப்பட்டதால் மனவேதனை: டாஸ்மாக் ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2017-04-13 10:24 GMT   |   Update On 2017-04-13 10:24 GMT
மதுக்கடை மூடப்பட்டதால் மன வேதனை அடைந்த டாஸ்மாக் ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காரியாபட்டி:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்களிடையே மிகுந்த ஆதரவு உள்ளது. மேலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க டாஸ்மாக் நிர்வாகிகள் பல இடங்களில் முயன்றபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சாலை மறியல், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மதுக்கடையை திறக்க வேண்டாம் என மாணவ, மாணவிகளும் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் மூடப்பட்டதற்காக ஊழியர் ஒருவர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள செம்பொன்நெறிஞ்சியைச் சேர்ந்தவர் முத்தழகு (41). டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்த இவர் டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளராகவும் இருந்து வந்தார்.

தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 10 நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். கடை மூடப்பட்டதால் வேலை இல்லையே என்ற விரக்தியில் இருந்த முத்தழகு திடீரென வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News